ஆர்.கே.நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மன்னராட்சியை ஒழிக்க வேண்டும், பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாகக் கூடாது என்றுதான் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துக் காட்டியுள்ளார்கள் எனக் குறிப்பிட்ட அவர், அறிஞர் அண்ணா உருவாக்கி, கலைஞர் 50 வருடம் காத்த இயக்கம் இன்று தோற்றுப் போய் நிற்கிறது என்றார்.

​மேலும் பேசிய அவர், “திரு மு.க.ஸ்டாலின் அவர்களே… உங்கள் தோல்வி எதனால் என்று சிந்தித்துப்பாருங்கள். மைசூரில் போய் உட்கார்ந்துகொண்டு பிஜேபியோடு எப்படி கூட்டணி வைக்கலாம் என்று பையனும் மாப்பிள்ளையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்ற அதிரடித் தகவலையும் பகிர்ந்துள்ளார். தமிழக மக்கள் தங்களது தலைவர் விஜய் இருக்கும் வரை, கருணாநிதி குடும்பத்தில் இருந்து இன்னொரு முதலமைச்சர் உருவாகவே விடமாட்டார்கள் என்றும், மு.க.ஸ்டாலின் தான் அந்தக் குடும்பத்தின் கடைசி முதலமைச்சர் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகப் பிரகடனம் செய்துள்ளார்.