மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் கடுமையான ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அ.தி.மு.க., அதற்கு எதிராக வரும் 17-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும், தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அனுமதி பெற்று குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமான நிலையில் செயல்பட்டு வருவதாகவும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என்றும் தெரிவித்தனர். மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தி.மு.க. அரசு நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மதுரை மக்களுக்கு என்ன செய்தது? எனக் கேள்வி எழுப்பிய அவர்
“தி.மு.க. தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க. தற்போது திறந்து வைப்பதாகவும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என ஆட்சிக்கு வந்தவுடன் கூறிய தி.மு.க. அதனை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினர். தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்தில் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், “கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தான் அந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; மதுரை விமான நிலையத்திற்கு அதுபோன்ற முக்கியத்துவம் வழங்கப்படவில்லை” என்றார்.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யார் என்ன பேசினாலும், அடுத்த ஆட்சியை அமைப்பது அ.தி.மு.க. தான் என்றும், “அ.தி.மு.க.வை விமர்சிக்காமல் இருந்தால் முதல்வருக்கு தூக்கம் வராது”. தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர் “ஒரு அடிமை தான் இன்னொருவரை அடிமை எனச் சொல்வார்” என விமர்சித்தனர்.

“அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா?” என எம்.ஜி.ஆரை தி.மு.க. விமர்சித்ததாக நினைவூட்டிய அவர்கள், “தி.மு.க.வை 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர். தான். அவர் மறைந்த பிறகும் தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்” என்றனர். மேலும், “எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் யாருமில்லை. முதலமைச்சரே எம்.ஜி.ஆரை ‘பெரியப்பா’ என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் தி.மு.க.வினரை முதலமைச்சர் கண்டிக்க வேண்டாமா?” என கேள்வி எழுப்பினர்.