நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தின் கடன் சுமை தற்போது ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 36 லட்சம் பேரை இணைத்து வழங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. இதில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
கடந்த 60 ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் பெண்கள் தினமும் ரூ.30 கூட சம்பாதிக்க முடியாத சூழ்நிலையையே இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் என்பதே உண்மை. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால், தேர்தலை குறிவைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றார்.
செய்தி மற்றும் விளம்பர அரசியலைத் தாண்டி, இவர்கள் சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை என்றும், மக்கள் அரசியல் இருந்திருந்தால் மக்களே உழைத்து சம்பாதிக்கும் வாய்ப்புகளை உருவாக்கியிருப்பார்கள் என்றும் சீமான் விமர்சித்தார். கூடுதல் பேருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை கடந்த ஆண்டு ஏன் வழங்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் பிப்ரவரி மாதத்தில் செயல்படுத்துவதாக அரசு கூறுகிறது. மக்கள் எப்போது விழிப்புணர்வுடன் செயல்படப் போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ரூ.10 லட்சம் கோடி கடனை உருவாக்கிய தி.மு.க. அரசு, ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தியதாகச் சொல்லுங்கள் என்றும் அவர் சவால் விடுத்தார்.
பஸ்சில் மகளிருக்கு இலவச கட்டணம் வழங்கப்படுவதாக கூறினாலும், அந்தப் பணத்தை பெண்கள் தங்களது தந்தையோ, சகோதரரோ மூலமாகவே பெற வேண்டிய நிலை உள்ளது. தன்மானம் மிக்க தமிழன், தனது தாய் ரூ.1,000 பெற கையேந்தி நிற்பதை ஏற்க மாட்டான் என்றார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே ஏன் இவர்களுக்கு மக்கள் மீது அக்கறை வருகிறது என்றும், தமிழகத்தில் எந்த அமைச்சரின் துறையிலும் ஊழல் நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். இயற்கை பேரிடர் ஏற்பட்டால் பிரதமர் மோடியை பார்க்க முதல்வர் ஓடிச் செல்கிறார் என்றும், மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத முதல்வர், ஏன் திடீரென டெல்லி சென்றார் என்றும் விமர்சித்தார்.
நாட்டின் வளர்ச்சியை உண்மையில் சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுள் குறித்து அரசியல் செய்ய மாட்டார்கள். இதுவரை முருகன் மீது இல்லாத பாசம் இப்போது ஏன் வந்தது என்றும், காவிரி நீர் பிரச்சனைக்காக இவர்கள் போராட்டம் நடத்தியதுண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அயோத்தி பிரச்சனையை வைத்து அரசியல் செய்தவர்கள், ராமர் கோவில் கட்டப்பட்டதால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது முருகனை முன்வைத்து அரசியல் செய்ய முயல்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சி நடக்கிறது என்றார்.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான பாஜக ஆட்சிக்கு வித்திட்டது என முன்னாள் முதல்வர் கருணாநிதி என ராஜ்நாத் சிங் பாராட்டி பேசியுள்ளார். பா.ஜ.க. வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் என்றும், பா.ஜ.க.க்கு சதி திட்டங்களை தீட்டி கொடுப்பதும் தி.மு.க. தான் என்றும் சீமான் குற்றம் சாட்டினார். பா.ஜ.க. ‘இந்துக்களின் பாதுகாவலர்கள்’ என அரசியல் செய்யும் நிலையில், ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்ச்சியில் பாரதி குறித்து தான் பேசியதாகவும், தி.மு.க. மேடையிலும் பாரதி குறித்து பேச அழைத்தால் பேசத் தயார் என்றும் அவர் கூறினார். மேலும் “தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசியபோது அது இனித்ததா?” என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
