ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் தேவி. இவரது கணவர் பகவான் சிங், மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். தங்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, சந்தோஷ் தேவி தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், தனக்கு வாழ்வாதாரம் தேவைப்படுவதால், தனது கணவர் பகவான் சிங்கிற்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையில் பாதியை (குடும்ப ஓய்வூதியமாக) தனது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி சந்தோஷ் தேவி ஜோத்பூர் முதன்மை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், அங்கு அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பேந்திர சிங் பாட்டி மற்றும் முனாரி லால் ஹர்ஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சந்தோஷ் தேவியின் கோரிக்கையை நிராகரித்து அதிரடி தீர்ப்பளித்தது. அரசு விதிகளின்படி “குடும்ப ஓய்வூதியம்” (Family Pension) என்பது அரசு ஊழியரோ அல்லது ஓய்வூதியதாரரோ உயிரிழந்த பிறகுதான் அவரது குடும்பத்தினருக்குக் கிடைக்குமே தவிர, அவர் உயிருடன் இருக்கும்போதே அதில் பங்கு கேட்க சட்டத்தில் இடமில்லை என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். கணவன் பிரிந்து வாழும் பட்சத்தில், அவரிடமிருந்து சட்டப்படி ஜீவனாம்சம் பெற மட்டுமே மனைவிக்கு உரிமை உண்டு என்றும், அதை விடுத்து கணவரின் ஓய்வூதியக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தைப் பிரித்துக் கேட்க முடியாது எனக் கூறி சந்தோஷ் தேவியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
