உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில், கடந்த ஜூன் 11 அன்று இரவு 5 வயது சிறுமி தனது தாத்தாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள். பான்சடி என்ற பகுதி அருகே வந்தபோது, ஒரு அவசர வேலைக்காக தாத்தா பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அந்தச் சிறுமி பைக்கிலேயே அமர்ந்திருந்தாள். அந்தச் சமயம் பார்த்து, வேறொரு பைக்கில் அங்கு வந்த சந்தன் குமார் ஷா (29) என்ற நபர், பைக்கில் தனியாக அமர்ந்திருந்த அந்தச் சிறுமியைப் பாய்ந்து தூக்கிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினான்.
குழந்தையைக் காணாமல் பதறிப்போன தாத்தாவும் குடும்பத்தினரும் பல இடங்களில் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இதையடுத்து, நேற்று முன் தினம் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். இந்தத் தகவல் பரவியதும் அப்பகுதியில் பெரும் பதற்றமும் ஆத்திரமும் வெடித்தது.
புகாரைப் பதிவு செய்த போலீஸார், குற்றவாளியை விரைந்து பிடிக்க உடனடியாகப் பல தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் அன்றைய தினமே அந்தச் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
அப்போது அந்தப் பிஞ்சுச் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்து, மருத்துவர்களையே உலுக்கியது. இதையடுத்து, குற்றவாளி சந்தன் குமார் ஷா மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த அவனைக் கண்காணித்து நேற்று அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
