உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌசியில் தனது கணவன் ராகுலை மிகக் கொடூரமாகக் கொலை செய்த ரூபி என்ற பெண், காவல்துறையினருக்கே சவால் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்குச் செல்லும் வழியில், “என்னை இப்போது வேண்டுமானால் நீங்கள் கைது செய்திருக்கலாம், ஆனால் நீதிமன்றத்தில் என் மீதான குற்றத்தை உங்களால் நிரூபிக்க முடியாது” என்று அந்தப் பெண் தைரியமாக போலீசாரிடம் கூறியுள்ளார்.

ராகுலின் உடல் பாகங்கள் முழுமையாகக் கிடைக்காததையும், குறிப்பாகத் தலை இன்னும் மீட்கப்படாததையும் சுட்டிக்காட்டிய அவர், தலை கிடைக்காதவரை இது ராகுலின் உடல் தான் என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாது என்று ஏளனமாகப் பேசியுள்ளார்.

கங்கையில் வீசப்பட்ட அந்த உடல் பாகங்கள் ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டதால், அவை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது நீர்வாழ் உயிரினங்கள் உண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த வழக்கில் தங்களிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் உறுதியாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட உடல் பாகங்களின் டிஎன்ஏ மாதிரிகளை ராகுலின் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஆதாரத்தை உறுதிப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், ராகுல் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே, அவர் தங்கியிருந்த அறையை ரூபி காலி செய்து அனைத்துப் பொருட்களையும் எடுத்து வந்திருப்பது, இது ஒரு திட்டமிட்ட சதி என்பதை நிரூபிப்பதாகப் போலீசார் கூறுகின்றனர். டிஎன்ஏ அறிக்கை வந்தவுடன் இந்தப் பெண்ணின் குற்றத்தை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.