மும்பை சிஎஸ்டிஎம்-பன்வெல் மின்சார ரயிலில் பயணம் செய்த 25 வயது இளைஞர் ஹர்ஷ் படேல், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி செம்பூரில் இருந்து பன்வெல் நோக்கிச் சென்றபோது அவர் மயங்கி விழுந்துள்ளார்.
வாஷி ரயில் நிலையத்தில் அவரை மீட்ட ரயில்வே போலீசார், அங்கிருந்த 108 ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவர் மதிய உணவிற்காகச் சென்றிருந்ததால், ஆம்புலன்ஸை இயக்க ஆள் இல்லை. இதனால் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாமல், இறுதியில் போலீஸ் ஜீப் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அதற்குள் ஹர்ஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஹர்ஷின் சகோதரி அமிகா படேல் சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாஷி ரயில் நிலையத்தில் ஸ்ட்ரெச்சர், சக்கர நாற்காலி மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான எந்த வசதியும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மிக முக்கியமான அந்த ‘கோல்டன் ஹவர்’ நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததே தனது சகோதரனின் இறப்பிற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ள குடும்பத்தினர், பயணிகளின் பாதுகாப்பிலும் அவசர கால மருத்துவ வசதியிலும் ரயில்வே நிர்வாகம் காட்டும் அலட்சியமே இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணம் என வேதனை தெரிவித்துள்ளனர்.
