தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், தனக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் டிஜிட்டல் சித்திரவதைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிரடிப் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒரு வருடமாக டிவிகே-வில் இருந்தபோது நான் அனைவராலும் ‘அக்கா’ என்று மதிக்கப்பட்டேன்.

ஆனால், கட்சியை விட்டு வெளியே வந்த அடுத்த நிமிடமே என் கேரக்டரை அசிங்கப்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள்” என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரு பெண் கட்சி மாறுவது என்பது அவரது உரிமை, ஆனால் அதற்காகச் சமூக வலைதளங்களில் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், கட்சியை விட்டு வெளியேறும் பெண்களை முடக்க வேண்டும் என்ற ஒரு மோசமான கலாச்சாரம் அங்கு நிலவுவதாகவும், சிபிஐ விசாரணை நடத்தும் பாணியில் ஒரு பெண்ணின் மிகத் தனிப்பட்ட (Personal) விஷயங்களைத் தோண்டி எடுத்து அசிங்கப்படுத்துவதாகவும் சாடினார்.

“அரசியலுக்கு வரும் பெண்களுக்கு இது என்ன மாதிரியான பாதுகாப்பைத் தரும்?” என்று விஜய்யை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பிய ரஞ்சனா நாச்சியார், தன்னை இணையதள வாயிலாக இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளார். தன் மீதான இந்த ‘கேரக்டர் அசாசினேஷன்’ அரசியல் நாகரிகமற்றது என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.