தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியாரின் புகார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்துள்ள புகாரில், தான் கட்சி மாறிய காரணத்திற்காகத் தமக்குத் தொடர்ச்சியாக ‘டிஜிட்டல் சித்திரவதைகள்’ அளிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

​”என்னை இணையதளத்தில் அப்யூஸ் செய்பவர்கள் அனைவரும் விஜய் அவர்களின் புகைப்படத்தையும், கட்சியின் கொடியையும் தங்கள் புரோஃபைல் படமாக வைத்துள்ளனர்” என்று குறிப்பிட்ட அவர், ஆபாசமான பேச்சுக்கள், புகைப்படங்களை மார்ஃபிங் செய்து பரப்புவது என எல்லை மீறிச் செல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, நடிகர் விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ (Virtual Warriors) குழுவினர்தான் இதற்குப் பின்னால் இருந்து தமக்கு நெருக்கடி கொடுப்பதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். அரசியலில் கட்சி மாறுவது சகஜமான ஒன்றுதான் என்றாலும், ஒரு பெண்ணை இணையதள வாயிலாக இழிவுபடுத்துவது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.