தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் நேரிட்ட சாலை விபத்தில், தென்காசி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் மற்றும் அவரது 5 வயது மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடையநல்லூர் அடுத்த பாம்புகோவில் சந்தையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கண்ணன் (35). தென்காசி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த இவர், தனது மனைவி செல்வராணி மற்றும் இரு குழந்தைகளுடன் இலஞ்சியில் வசித்து வந்தார்.
நேற்று இரவு கடையநல்லூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் இலஞ்சி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது, இடைகால் பகுதியில் எதிரே தென்காசியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் ஒன்று கண்ணனின் வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய கண்ணன், அவரது மனைவி செல்வராணி மற்றும் இரு ஆண் குழந்தைகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் மற்றும் அவரது மூத்த மகன் ராம் கிரிஷ் (5) ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த செல்வராணி மற்றும் 6 மாதக் குழந்தை ராம் கிரிடிக் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து இடைகால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், காவலர் மற்றும் அவரது மகன் உயிரிழந்த சம்பவம் தென்காசி காவல்துறை வட்டாரத்திலும் அப்பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
