தென்காசி அருகே சேர்ந்தமரம் பகுதியில் 4 சவரன் தங்க நகைக்காக இல்லத்தரசி முருகசெல்வி என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் அய்யங்கண்ணு என்பவரின் மனைவியான முருகசெல்வி (42), தனது 12 வயது மகளுடன் வசித்து வந்தார்.
மார்கழி மாத வழிபாட்டிற்காக அதிகாலை எழுந்து கோவிலுக்குச் செல்லும் வழக்கம் கொண்ட அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது குளியலறையில் முருகசெல்வி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததோடு, அவர் அணிந்திருந்த 4 சவரன் நகைகளும் திருடப்பட்டிருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தியதில், வடநத்தம்பட்டியைச் சேர்ந்த ஹசரத் (24) என்ற பால் வியாபாரி பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், புதிதாக லாரி வாங்கி தொழில் தொடங்குவதற்குப் பணம் தேவைப்பட்டதால், முருகசெல்வியைத் தனியாக இருப்பதை அறிந்து கொலை செய்து நகையைப் பறித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரிடமிருந்து 4 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குன்னூரில் நகைக்காக நடந்த கொலை வழக்கில் நேற்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதற்குள் தென்காசியில் இச்சம்பவம் நிகழ்ந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
