தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் இன்று தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தினை திருச்சியில் தொடங்கினார். நடிகர் விஜய் பிரச்சார கூட்டத்தில் பேசும்போது திமுக 505 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது எனவும் அதைக் கேட்க மட்டும் தான் முடியும் எனவும் பதில் எதுவும் வராது என்று விமர்சித்தார். அதன் பிறகு டீசல் விலையை குறைப்போம், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு கொடுத்த நிலையில் எதையும் நிறைவேற்றவில்லை எனவும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அதனை சொல்லிக்காட்டி அசிங்கப்படுத்துகிறார்கள் என்றும் விமர்சித்தார்.
பின்னர் மகளிர் விடியல் பயணம் என்று கூறுகிறார்கள் ஆனால் அனைத்து மகளிருக்கும் இலவச பேருந்து பயணம் கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டினார். திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. பெண்கள் பேருந்து பயணத்தை ஓசி பயணம் என்று கூறி இழிவு படுத்துகிறார்கள். அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று கூறிவிட்டு அதையும் செய்யவில்லை என்றார். மேலும் மோசமான கிட்னி திருட்டு விவகாரத்தை முறைகேடு என்று கூறுகிறார்கள் என்றார்.
காவிரி பாயும் திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. திருச்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்காமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்று கூறிய விஜய் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் தான் கிட்னி திருட்டு நடந்துள்ளது என்றும் கூறினார்.
