தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் இன்று திருச்சியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். அடுத்து வரும் 2026 தேர்தலில் விஜய் போட்டியிட இருக்கும் நிலையில் முதல் மாநாட்டினை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலும் இரண்டாவது மாநாட்டை மதுரையிலும் வெற்றிகரமாக பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
முதல் கட்டமாக இன்று பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கிய அவர் அடுத்ததாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இன்று காலை ஏர்போர்ட் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரமாக கடந்து மரக்கடை பகுதியை வந்தடைந்தார். ஏர்போர்ட் முதலே மரக்கடை வரை தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் திருச்சி நகரமே ஸ்தம்பித்து போனது. நடிகர் விஜய்க்காக தொண்டர்கள் காலை முதல் அவரது பேச்சை கேட்க ஆரவாரமாக இருந்த நிலையில் சற்று ஏமாற்றம் மிஞ்சியது.
அதாவது நடிகர் விஜய் பேசும்போது மைக் சரியான முறையில் வேலை செய்யாததால் அவர் என்ன பேசினார் என்பதை தொண்டர்களுக்கு கேட்கவில்லை. அவர் சைகை மூலமாக என்னுடைய பேச்சு கேட்கிறதா? என்று கேட்ட நிலையில் தொண்டர்களும் நிர்வாகிகளும் கேட்கவில்லை என்றனர். இருப்பினும் விஜய் பேச பேச அவர்கள் ஆரவாரப்படுத்தினர். மேலும் காலை முதல் காத்திருந்த தொண்டர்களுக்கு விஜய் பேசியது சரிவர கேட்காததால் சற்று ஏமாற்றம் மிஞ்சிய நிலையில் அவர்கள் கேட்கல கேட்கல என கத்திய நிகழ்வுகளும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
