அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது கடந்த ஆண்டில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் பிடிபட்டுள்ளதாக அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (CBP) தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 85,119-ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 23,830-ஆகக் குறைந்துள்ளது.

எண்ணிக்கை கணிசமாகச் சரிந்திருந்தாலும், அமெரிக்காவிற்குள் நுழைய முயலும் சட்டவிரோதக் குடியேறிகளின் பட்டியலில் இந்தியா இன்னும் முன்னிலை வகிப்பது கவலையளிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிபர் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகத்தின் கடுமையான கொள்கை மாற்றங்கள் மற்றும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) தீவிர அதிரடி நடவடிக்கைகளே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

எல்லைகளில் ரோந்துப் பணிகள் பல மடங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதோடு, கடத்தல் பாதைகளும் நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

சட்டவிரோத ஊடுருவலில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தண்டனைகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளதால், பழையபடி எளிதாக ஊடுருவ முடியாத சூழல் உருவாகியுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு மற்றும் அதிக ஊதியம் தேடிச் சென்ற தனிநபர்களாகவே உள்ளனர். இருப்பினும், எல்லைப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் சிறுவர்கள் கண்டறியப்படுவது தற்போது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு கனடா எல்லை வழியாக நுழைய முயன்று குஜராத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த ‘டிங்குச்சா’ துயரச் சம்பவம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் ஆகியும்,

இத்தகைய உயிராபத்தான பயணங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதும், பின்னர் அவர்களைக் கைவிடுவதும் தொடர்கதையாகி வருவது மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.