இந்தியப் பங்குச்சந்தை இன்று (வியாழக்கிழமை, 19-02-2026) முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த சந்தை, இன்று வர்த்தக நேரத்தின் முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சரிவைச் சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) சுமார் 1,236 புள்ளிகள் வரை சரிந்து 82,498 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி (Nifty) 365 புள்ளிகள் சரிந்து 25,454 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இந்த அதிரடி வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதில் நிலவும் இழுபறி மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது போன்ற உலகளாவிய காரணங்களே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக வங்கி, தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் ரியாலிட்டி துறைப் பங்குகள் அதிக விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன. கடந்த சில நாட்களாகக் கிடைத்த லாபத்தை முதலீட்டாளர்கள் அவசரமாக வெளியே எடுத்ததும் (Profit Booking) இந்த ‘மார்க்கெட் கிராஷ்’ -க்கு வழிவகுத்தது.

வரும் வாரங்களில் உலக நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த நிச்சயமற்ற நிலை நீடிப்பதால், பங்குச்சந்தை மேலும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.