ஐதராபாத்தில் சினிமா பாணியில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தையே அதிரவைத்துள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கும், சுனிதா என்ற ஐடி ஊழியருக்கும் கடந்த 2022-ல் திருமணமாகி கனடா சென்றனர்.

ஆனால், அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 8 மாதங்களிலேயே பிரிந்த சுனிதா, இந்தியா திரும்பி மகேஷ் மீது போலீசில் புகார் அளித்தார். 2024-ல் விவாகரத்து பெற்ற சுனிதா, ஐதராபாத்தில் ஸ்ரீநாத் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதற்கிடையில், தாயார் மறைவுக்காக கனடாவிலிருந்து இந்தியா வந்த மகேஷ், சுனிதா கொடுத்த புகாரால் தனது விசா முடக்கப்பட்டதை அறிந்து ஆத்திரமடைந்தார்.

பழிவாங்கத் துடித்த மகேஷ், யூடியூப் பார்த்து ரம்பம் மற்றும் பாறை அறுக்கும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்று ஒத்திகை பார்த்துள்ளார்.

நேற்று சுனிதாவின் கணவர் வெளியே சென்ற நேரம் பார்த்து, வீட்டிற்குள் புகுந்த மகேஷ், சுத்தியலால் சுனிதாவின் தலையில் தாக்கி, பின்னர் ரம்பத்தால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.

சுனிதாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடவே, கழிவறைக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றித் தற்கொலை செய்ய முயன்ற மகேஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விவாகரத்து பெற்ற பிறகும் தீராத வஞ்சத்தால் நடந்த இந்த கொடூரக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.