தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. பிப்ரவரி இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால், கூட்டணிக் கணக்குகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகின்றன. குறிப்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்துள்ள புதிய வியூகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமதாஸ், அதில் திமுகவின் கனிமொழி எம்பி-யை பாராட்டியிருப்பதுடன், விஜய்க்கு ஆதரவான தொனியிலும் பேசியுள்ளார்.
இது “திமுக அல்லது தவெக” என ஏதோ ஒரு கதவு திறக்காதா என்கிற ராமதாஸின் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. பாஜக பக்கம் அன்புமணி சென்றுவிட்ட நிலையில், தனித்துவிடப்பட்ட ராமதாஸ் இப்போது ஒரு பலமான பிடிமானத்திற்காகத் தூண்டில் போட்டுள்ளார். இருப்பினும், இந்த ‘டபுள் கேம்’ ராமதாஸிற்கு கைகொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். திமுகவைப் பொறுத்தவரை பாமக உள்ளே வந்தால், நீண்டகால நண்பரான விசிக வெளியேறிவிடும் என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார்.
மறுபுறம், ‘ஆட்சியில் பங்கு’ என முழங்கும் விஜய்க்கு வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கி தேவைப்பட்டாலும், ராமதாஸை சேர்த்துக் கொள்வது தனது ‘தனித்து போட்டி’ பிம்பத்தை பாதிக்குமோ என அவர் யோசிக்கலாம். ஒருவேளை விஜய் கைவிரித்தால், ராமதாஸ் அரசியலில் ஓரங்கட்டப்படும் சூழல் உருவாகலாம். ராமதாஸ் வீசியிருக்கும் இந்த அறிக்கை அஸ்திரம், அவர் எதிர்பார்த்த மாங்காயை வீழ்த்துமா அல்லது அவரே களத்தில் தனித்து விடப்படுவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
