அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மூத்த புள்ளிகளின் அரசியல் எதிர்காலம் இப்போது பெரிய கேள்விக்குறியாகி, அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் கதவுகளை முழுமையாக அடைத்துவிட்ட நிலையில், சசிகலா ‘தனிக்கட்சி’ தொடங்கி தனது பலத்தை நிரூபிக்கத் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. மறுபுறம், ஒருகாலத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இப்போது விஜய்யின் தவெக கட்சியில் ஐக்கியமாகிவிடலாமா என்கிற கணக்கில் காய்களை நகர்த்தி வருகிறார். இதற்காக செங்கோட்டையன் மூலமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஏற்கனவே திமுக, அதிமுக என ஆளாளுக்கு ஒரு பக்கம் சிதறிவிட்ட நிலையில், அவர் இன்னும் மௌனம் காப்பது புயலுக்கு முன்னால் இருக்கும் அமைதியா அல்லது அவரது அரசியல் அஸ்தமனமா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. தனிக்கட்சி தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அவருக்குக் குறைவாகவே இருப்பதால், விஜய்யின் தயவை அவர் பெரிதும் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை தவெக-விலும் இடம் கிடைக்காவிட்டால், ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட அரசியல் பயணம் என்னவாகும் என்பது பெரும் மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
