தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலில், தேமுதிக தனது நிலைப்பாட்டை இன்னும் ரகசியமாகவே வைத்திருப்பது மற்ற கட்சிகளிடையே ஒருவித பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. “இறுதி வேட்பாளர் பட்டியல் வரும்போதுதான் எங்கள் கூட்டணியை அறிவிப்போம்” என தேமுதிக பிடிவாதமாக இருப்பதால், அவர்கள் யாருடன் கைகோர்க்கப் போகிறார்கள் என்பது இப்போது வரை ஒரு புரியாத புதிராகவே நீடிக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, தேமுதிக தரப்பு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முகாம்களுடனும் ரகசியமாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் தவெக-வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டாலும், இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் ஒருபுறம் இருக்க, கூட்டணி முடிவானால் ஒழியத் தொகுதிகளின் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்களை வகுக்க முடியாது. இதனால் தேமுதிக-வின் முடிவை நம்பி இருக்கும் தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஒருவேளை பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமையாவிட்டால், தேமுதிக-வின் அடுத்த கட்டம் என்ன? யாருடைய பக்கம் கேப்டனின் கட்சி சாயப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்த இழுபறி நீடிப்பது தமிழக தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
