பாகிஸ்தானில் ராணுவத்தையும், ராணுவ தலைமை தளபதியையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக, பிரபல மனித உரிமை வழக்கறிஞர் ஜைனாப் மசாரி மற்றும் அவரது கணவர் ஹாதி அலி ஆகியோருக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும் ஜைனாப் மசாரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ஷீரன் மசாரியின் மகள் ஆவார். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இந்த தம்பதியினர் மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு பாகிஸ்தானில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்டு வரும் கடுமையான அடக்குமுறையின் ஒரு பகுதியாகவே இந்த தண்டனை பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ராணுவ அமைப்பை விமர்சிப்பவர்கள் மீது இத்தகைய தேசவிரோத வழக்குகள் பதியப்படுவதும், அவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனை வழங்கப்படுவதும் அந்நாட்டில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதையே காட்டுவதாக பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
