ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குன்னார் நதிக்கரையில், வறுமை காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத் துகள்களைத் தேடி மணலைத் தோண்டி வருகின்றனர்.
நாட்டின் மோசமான பொருளாதாரச் சூழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால், காபூல் போன்ற நகரங்களில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, பலர் நீண்ட தூரம் பயணம் செய்து இங்கு வந்துள்ளனர்.
கடுமையான வெயிலிலும், கரடுமுரடான மலைப் பகுதிகளிலும் நாள் முழுவதும் மண்ணைத் தோண்டி, அதைச் சலித்து அதில் தங்கம் இருக்கிறதா என்று இவர்கள் தேடுகின்றனர்.
கோதுமை மாவை விடச் சிறியதாகக் கிடைக்கும் இந்தத் தங்கத் துகள்கள், தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் மக்கள் இங்கு குவிந்துள்ளனர்.
தங்கம் எடுப்பதற்காக இவர்கள் மிகவும் பழமையான முறைகளையே பயன்படுத்துகின்றனர். மலைகளைக் கடப்பாறையால் உடைத்து, அந்த மண்ணை மூட்டைகளில் கட்டி நதிக்கரைக்குக் கொண்டு வருகின்றனர்.
பின்னர் நதிநீரில் அந்த மண்ணைக் கழுவும்போது, லேசான மண் அடித்துச் செல்லப்பட்டு, கனமான தங்கத் துகள்கள் மட்டும் அடியில் தங்கும். ஒரு வாரம் முழுவதும் கடுமையாக உழைத்து ஒரு கிராம் தங்கம் கிடைத்தால், சந்தையில் அதற்கு சுமார் 8,000 ஆப்கானி (ஆப்கானிஸ்தான் பணம்) கிடைக்கிறது.
தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில், இந்தத் தொகை அவர்களுக்குப் பெரிய ஆறுதலாக இருப்பதால், உயிருக்கு ஆபத்தான இடங்களிலும் மக்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.
