மத்திய கிழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அதிரடி ‘ஆறு அம்சத் திட்டத்தை’ அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் லெபனான் மீது எவ்வித தரைவழி அல்லது வான்வழித் தாக்குதலையும் நடத்தாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், தற்காப்புக்காகப் பதில் தாக்குதல் நடத்தும் உரிமையை இஸ்ரேல் தன்னிடம் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மிக முக்கியமாக, லெபனான் மண்ணில் செயல்படும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் முழுப் பொறுப்பும் அந்நாட்டு அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால அமைதியை நிலைநாட்டவும், எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் அமெரிக்கா இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் லெபனான் மண்ணிலிருந்து தனது படைகளை இப்போதைக்குத் திரும்பப் பெறப்போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதனால் அங்கு இன்னும் முழுமையான பாதுகாப்புச் சூழல் நிலவவில்லை என்பதால், மக்கள் இப்போதைக்குத் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெரி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போர் நிறுத்தம், பல ஆண்டுகளாக வீடிழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு மெல்லிய நம்பிக்கையை அளித்துள்ள போதிலும், இது நீடிக்குமா என்பது உலக நாடுகளின் உன்னிப்பான கவனிப்பில் உள்ளது.
