அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 53 வயது நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் மீனு பத்ரா, அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையால் (ICE) கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வரும் மீனு பத்ரா, மார்ச் 17-ஆம் தேதி விமான நிலையத்தில் வைத்துத் தடுத்து நிறுத்தப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட தனக்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், தொடர்ந்து உட்கொண்டு வந்த மருந்துகள் மறுக்கப்பட்டதால் தனக்குக் கடுமையான சுவாசப் பாதிப்பு ஏற்பட்டு தற்போது பேசும் திறனையே (குரல்) இழந்துவிட்டதாகவும் அவர் உருக்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு குற்றவாளியைப் போலக் கைவிலங்கிடப்பட்டு தான் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனு பத்ரா ஒரு சாதாரண நபர் அல்ல; டெக்சாஸ் நீதிமன்றங்களில் இந்தி, பஞ்சாபி மற்றும் உருது மொழிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரே மொழிபெயர்ப்பாளர் இவர்தான்.

1980-களில் இந்தியாவில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தனது பெற்றோரை இழந்த பிறகு தப்பிச் சென்று அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர். நான்கு பிள்ளைகளின் ஒற்றைத் தாயான இவரின் ஒரு மகன் தற்போது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

“நான் எனது நாட்டுக்காக (அமெரிக்கா) ராணுவத்தில் சேவை செய்கிறேன், பதிலுக்கு எனது தாயை என்னிடம் ஒப்படையுங்கள்” என்று அந்த ராணுவ வீரர் விடுத்துள்ள கோரிக்கை அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. அவரை வேறு நாட்டிற்கு நாடு கடத்த அதிகாரிகள் முயன்று வரும் நிலையில், இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.