ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் சற்றே தணிந்து வரும் நிலையில், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசப் பகுதியைத் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கொண்டாடி சீனா மீண்டும் சீண்டலில் ஈடுபட்டுள்ளது சர்வதேச அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ‘ஜாங்னான்’ (Zangnan) என்று அழைத்து வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சீன மொழியில் பெயர் சூட்டுவதற்குத் தங்களுக்கு மட்டுமே முழு உரிமை இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இது குறித்துத் தெரிவிக்கையில், ஜாங்னான் பகுதி சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டது. இந்தியாவால் சட்டவிரோதமாகக் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. எனவே, அங்குள்ள இடங்களின் பெயர்களை மாற்றியமைக்க எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். டந்த 2017-ஆம் ஆண்டு முதல் சீனா அவ்வப்போது அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களுக்குச் சீனப் பெயர்களைச் சூட்டி வரைபடங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்குள்ள இடங்களுக்குச் சீனா கற்பனையான பெயர்களைச் சூட்டுவதால் உண்மை நிலவரம் மாறிவிடாது. இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாதுஎன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு தற்போது சீராக இருப்பதாகவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்த சீனா விரும்புவதாகவும் குவோ ஜியாகுன் கூறியுள்ளார். எனினும், ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என கூறிக்கொண்டு, மறுபுறம் இந்தியாவின் எல்லையில் உரிமை கொண்டாடும் சீனாவின் இரட்டை நிலைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
