அன்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒரு குடும்பம், கணவனின் ஒரு கொடூரமான ரகசியத்தால் நிலைகுலைந்து போன சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டோனியல் ஷோவ் மற்றும் சாட் ஷிப்பர் ஆகிய இருவரும் ஒரு பைபிள் ஆய்வு வகுப்பில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக, மிகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நகர்ந்து வந்தது. சாட் ஷிப்பர் தனது குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு சிறந்த தந்தையாகவே பார்க்கப்பட்டார்.

ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டில் இவர்களது வாழ்க்கை தலைகீழாக மாறியது. சாட் ஷிப்பரை போலீசார் திடீரென கைது செய்தனர். விசாரணையில் வெளிவந்த உண்மைகள் டோனியலை நிலைகுலையச் செய்தன. லாரி மற்றும் கான்ஸ்டன்ஸ் வேன் ஓஸ்டன் என்ற முதிய தம்பதியை சாட் கடத்தியது தெரியவந்தது.

தனது வாடகை வீட்டின் அடிப்பகுதியில் (Basement) ஒரு அறையை கட்டியிருந்த சாட், அது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கான ‘சேஃப் ரூம்’ என்று தனது மனைவியிடம் கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அந்த அறை சத்தம் வெளியே கேட்காத வகையில்  கடத்தலுக்காகவே உருவாக்கப்பட்டது.

கடத்தப்பட்ட முதிய தம்பதியை கைவிலங்கு மற்றும் டக்ட் டேப் கொண்டு கட்டிப்போட்டு, 48 மணிநேரம் அந்த அறையில் அடைத்து வைத்திருந்தார் சாட். தனது தொழில் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட பணத்தேவையை ஈடுகட்ட, அத்தம்பதியிடம் 3.5 லட்சம் டாலர் பிணைத் தொகை கேட்டு அவர் மிரட்டியுள்ளார்.

இந்த வழக்கில் சாட் ஷிப்பர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்றம் அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் மூலம் அவர் தனது வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.  தற்போது ‘Betrayal: Secrets & Lies’ என்ற ஆவணப்படத் தொடரில் டோனியல் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். “வெளியில் மிகவும் ஆன்மீகவாதியாகவும், அன்பான தந்தையாகவும் தெரிந்த ஒரு மனிதனுக்குள் இப்படியொரு அரக்கன் ஒளிந்திருப்பான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும் உறவுகளில் இருக்கும் போலித்தன்மை எவ்வளவு ஆபத்தானது என்பதை உலகிற்கு உணர்த்தவே தனது கதையை பகிர்ந்து கொள்வதாக டோனியல் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by People Magazine (@people)