அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் ஹார்முஸ் நீரிணை மற்றும் ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பல், 11 அழிவு கப்பல்கள் மற்றும் 4 தாக்குதல் கப்பல்கள் என மொத்தம் 15 போர் கப்பல்கள் மத்திய கிழக்கு கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த முற்றுகையினால் வெறும் 36 மணிநேரத்தில் ஈரானின் கடல்வழி வர்த்தகம் 90 சதவீதம் முடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், இந்த இக்கட்டான சூழலிலும் ஈரான் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஈரான் அரசு ஊடகத்திற்குப் பேட்டியளித்த அதிபர் மசூத் பெஷெஸ்கியன், “எங்கள் நாடு போரை விரும்பவில்லை, மாறாகப் பேச்சுவார்த்தையையே விரும்புகிறது.
ஆனால், அமெரிக்கா தனது விருப்பங்களை எங்கள் மீது திணிக்கவோ அல்லது எங்களைச் சரணடைய வைக்கவோ நினைத்தால் அது ஒருபோதும் பலிக்காது” என்று எச்சரித்துள்ளார். மேலும், சர்வதேச சட்டங்களை மீறி பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அப்பாவி குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த மிரட்டல்களுக்குப் பணியப் போவதில்லை என ஈரான் கூறியுள்ளதால், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுமா அல்லது போர் வெடிக்குமா என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன.
