ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பேருந்தில் பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பள்ளி சீருடை மற்றும் புத்தகப் பைகளுடன் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்குவது மட்டுமல்லாமல், பேருந்தின் கூரை மீதும் ஆபத்தான முறையில் ஏறி அமர்ந்து பயணிக்கின்றனர்.

அடிப்படைப் போக்குவரத்து வசதிகளைக் கூடச் செய்து தராத அதிகாரிகளின் அலட்சியத்தால், பிஞ்சுயிர்கள் தினந்தோறும் மரணப் போராட்டத்தை எதிர்கொண்டு கல்வி கற்கச் செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது. அந்தப் பேருந்தில் மாணவர்கள் மூட்டை முடிச்சுகளைப் போலத் தொங்கிக் கொண்டு செல்வதைப் பார்க்கும் எவருக்கும் நெஞ்சம் பதறுகிறது.

இந்தச் சூழலில் ஏதேனும் ஒரு குழந்தை தவறி விழுந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பேருந்து ஓட்டுநரா, பள்ளியா அல்லது மௌனம் காக்கும் போக்குவரத்துத் துறையா? “வெல்கம் டு ராஜஸ்தான்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளி, நாட்டின் கல்வி மற்றும் பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த விபரீதப் பயணம் முடிவுக்கு வர வேண்டுமெனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.