2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அந்த வெற்றியின் பின்னணியில் உள்ள ‘பெயரியல்’ (Numerology) ரகசியம் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் கூடுதலாக ஒரு ‘a’ என்ற எழுத்தைச் சேர்த்து, ‘J Jayalalithaa’ என மாற்றப் பரிந்துரைத்தவர் ஜோதிடர் வெற்றிவேல் (தற்போது ரதன் பண்டிட்). அந்தப் பெயர் மாற்றத்திற்குப் பிறகு ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.

அரசியலில் அடியெடுத்து வைத்த விஜய், தனது திட்டங்களை வகுப்பதில் இந்த ரதன் பண்டிட்டின் ஆலோசனைகளைப் பெற்று வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாவது, 2001-ல் ஈரோட்டில் இருந்து ஒரு பையோடு போயஸ் கார்டன் கதவுகளைத் திறந்த அந்த இளைஞர் வெற்றிவேல், இன்று ரதன் பண்டிட்டாக டெல்லியிலிருந்து வந்து விஜய்யின் இல்லக் கதவுகளைத் திறந்துள்ளார். அரசியலில் உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சரியான வழிகாட்டுதல். அம்மாவுக்கு (ஜெயலலிதா) வெற்றியைத் தேடித்தந்த அதே நிபுணர் தான், இன்று விஜய்யின் வாழ்விலும் வெற்றிக் கணக்கைத் தொடங்கி வைத்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான அன்று விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல் நபர் இந்த ரதன் பண்டிட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் ஒரு சாதாரண மனிதனும் சரித்திர நாயகனாக மாற முடியும் என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகளே சாட்சி எனத் தெரிவித்துள்ள பூங்குன்றன், தனது பெயரையும் மாற்றித் தந்தது இவர்தான் என்றும், ஜோதிடம் என்பது துல்லியமான கணக்கீடு என்றும் பாராட்டியுள்ளார். ஜெயலலிதா காலத்தைப் போலவே, தற்போது விஜய்யின் அரசியல் நகர்வுகளிலும் ஜோதிட ஆலோசனைகள் முக்கியப் பங்கு வகிப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.