தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (மே 07) தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்தச் சூழலில், புதிய அரசு அமைப்பதற்கான நிர்வாக நடைமுறைகள் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்று முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான கே.ஏ. செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதாவது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கான நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஏதுவாக, ஒரு ‘தற்காலிக சபாநாயகரை’த் தேர்ந்தெடுப்பது தொடர்பாகச் சட்டப்பேரவை செயலருடன் செங்கோட்டையன் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள விஜய், தனது முதல் அரசியல் இன்னிங்ஸை முதலமைச்சராகத் தொடங்க உள்ளதால், தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் பல்வேறு முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.