தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், கோட்டையில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் கையெழுத்திடப் போகும் இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்கள் குறித்த அதிரடித் தகவல்கள் தற்போதே கசியத் தொடங்கியுள்ளன.
தேர்தல் வாக்குறுதியில் தான் அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் முற்றிலும் இலவசமாகப் பயணிக்கும் ‘வெற்றிப் பயணம் திட்டம்’ மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் ‘இலவச மின்சாரத் திட்டம்’ ஆகிய இரண்டு மெகா நலத்திட்டங்களின் கோப்புகளில்தான் விஜய் தனது முதல் முதலமைச்சர் கையெழுத்தைப் போட வாய்ப்புள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக அரசு சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கி வரும் நிலையில், தவெக அதை விரிவுபடுத்தி “அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும்” பொருந்தும் வகையில் மாஸ் காட்டப் போகிறது என்ற செய்தி, இல்லத்தரசிகள் மற்றும் உழைக்கும் பெண்கள் மத்தியில் தற்போதே பெரும் எதிர்பார்ப்பையும் ஏகோபித்த வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
