பெங்களூருவில் பேருந்துப் பயணம் செய்த பயணி ஒருவர், வெறும் 6 ரூபாய் கட்டணத்திற்குப் பதிலாக தவறுதலாக 62,316 ரூபாயை யுபிஐ மூலம் செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 14-ம் தேதி இரவு, பனசங்கரியிலிருந்து கதிரேனஹள்ளிக்கு பி.எம்.டி.சி பேருந்தில் சென்ற அந்த பயணி, டிக்கெட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தும் போது கவனக்குறைவாக இந்த பெரும் தொகையை அனுப்பிவிட்டார்.
மேலும் பரிவர்த்தனை முடிந்த பின்னரே தான் செய்த தவறை உணர்ந்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக நடத்துனரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். பரிவர்த்தனையைச் சரிபார்த்த நடத்துனர், பணம் பி.எம்.டி.சி கணக்கிற்குச் சென்றதை உறுதி செய்தார். இருப்பினும், விதிமுறைகளின்படி அவ்வளவு பெரிய தொகையை உடனடியாகத் திருப்பித் தர இயலாது என்பதால், பணிமனை மேலாளரைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்தச் சம்பவம் குறித்து பி.எம்.டி.சி அதிகாரிகள் கூறுகையில், தொழில்நுட்ப ரீதியான சரிபார்ப்புகளுக்குப் பிறகு அந்தப் பணம் உரியப் பயணியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் தொகையை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
