சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியில், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மென்பொருள் பொறியாளர் தினேஷ்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொறியாளர் இளங்கோவன், அந்த நபர் பெண்களை வழிமறித்து அத்துமீறலில் ஈடுபடுவதைக் கண்டு அவரைப் பிடிக்க முயன்றார்.
அப்போது அந்த நபர் இளங்கோவனை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.இதுகுறித்த புகாரின் பேரில் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பிடிபட்ட நபர் கொளத்தூரைச் சேர்ந்தவர் என்பதும், ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. மதிய நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பெண்களைக் குறிவைத்து அத்துமீறுவதை இவர் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
விசாரணையில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இவர் இதுபோன்று நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
