தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘ஒரு கிராம் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளதுடன், அதற்குப் பதிலாக ஒரு பயனுள்ள மாற்று யோசனையையும் முன்வைத்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக ஒவ்வொரு வருடமும் சுமார் 755 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்போவதாக தவெக அரசு அறிவித்துள்ள நிலையில், குழந்தைகளுக்குப் போடும் தங்க மோதிரம் சில மாதங்களிலேயே கைக்கு பத்தாமல் போய்விடும் என்பதால், இந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். ​மேலும் இதுகுறித்து பேசிய அவர், தற்போது தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு 1 லட்சம் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த 755 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான உயரிய வசதிகள் கொண்ட ‘பிரசவ வார்டுகளாக’ மாற்றியமைக்கலாம் என்றும், கூடுதல் மருத்துவர்களை நியமிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். அதுவே ஒட்டுமொத்த மக்களுக்கும் நிரந்தரப் பயனைத் தரும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.