இந்தியாவின் 15 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இலங்கையில் நடந்த முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த அவர், சமீபத்திய ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார்.

அந்தத் தொடரில் அதிகபட்சமாக 72 சிக்ஸர்களை விளாசிய அவர், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் தேசிய அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஜூன் 26-ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் அறிமுகமானால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, இந்தியாவின் மிக இளம் வயது அறிமுக வீரர் என்ற புதிய சரித்திரத்தைப் படைப்பார்.

இதற்கிடையில், வைபவ்வின் அபார திறமையைப் பார்த்து வியக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, அவரது வயதைச் சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளார். வைபவ் 15 வயதிற்குப் பதிலாக 21 அல்லது 22 வயதுடையவராக இருக்கலாம் என்றும், இவ்வளவு வலுவான பேட்டிங் திறமை ஒரு 15 வயது சிறுவனுக்கு இருப்பது கடினம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், அவர் பார்ம் அவுட் ஆகும்போது அவரது பலவீனங்கள் வெளிப்படும் என்று தன்வீர் அகமது கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், பிசிசிஐ அவருக்குப் பயிற்சி உபகரணங்களை வழங்கி முழுமையாகத் தயார்படுத்தியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வைபவ்வின் சர்வதேச அறிமுகத்தைக் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.