இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் வேளையில், அணியின் உள்விவகாரங்கள் மற்றும் வீரர்களுக்கு இடையேயான மோதல்கள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது 4-வது தொடர் தோல்வியைச் சந்தித்து உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த மோசமான நிலைக்கு மைதானத்தில் காட்டிய சுணக்கம் மட்டுமல்லாமல், டிரஸ்ஸிங் ரூமில் நிலவும் கடுமையான கோஷ்டி மோதல்களும், ஒழுங்கீனங்களுமே முக்கியக் காரணம் என சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் தீயாய்ப் பரவி வருகின்றன. குறிப்பாக, அணியின் ஆலோசகரான வஹாப் ரியாஸுக்கும், கேப்டன் பாத்திமா சனாவுக்கும் இடையே வீரர்கள் தேர்வு மற்றும் ஒழுங்கு விவகாரங்களில் கடுமையான மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு முன்பாக, சீனியர் வீராங்கனை ஆலியா ரியாஸின் கணவர், அணியினர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததற்கு கேப்டன் பாத்திமா சனா கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை வெளியேற்ற வைத்துள்ளார். மேலும், தீவிரப் பயிற்சிப் போட்டி இருந்த நேரத்தில், ஆலியா தனது கணவருடன் சுற்றிப் பார்க்கச் சென்றதால், அவரை அணியில் இருந்து நீக்க சனா விரும்பியுள்ளார்; ஆனால் வஹாப் ரியாஸ் பிடிவாதமாக ஆலியாவைச் சேர்த்துள்ளார்.
அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றதைத் தொடர்ந்து, “உங்கள் தப்பான முடிவாலும், ஒழுங்கீனத்தாலுமே தோற்றோம்” என வஹாப் ரியாஸின் முகத்திற்கு நேராகவே பாத்திமா சனா கத்தியது அணியினரிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே பயிற்சியாளர்களைத் தொடர்ந்து மாற்றி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த உட்கட்சி பூசலை இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
