தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், அதிமுகவிலிருந்து அதிருப்தியால் விலகி, தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தவெக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் ஆனந்தின் இல்லத்தில் இந்த அதிரடி சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பானது, விஜயபாஸ்கர் தவெக-வில் இணையவிருப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைமை மீது அதிருப்தி அடைந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தவெக-வை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் இருந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த நிலையில், தற்போது சி.விஜயபாஸ்கரும் வரும் திங்கள்கிழமை (ஜூன் 29) அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைய உள்ளதாகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
