மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு பெண் விசித்திரமான மற்றும் அதிசயக் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்துள்ளார். பிறக்கும்போதே நான்கு கைகளும், நான்கு கால்களும் கொண்டு பிறந்த அந்த குழந்தையைக் காண மருத்துவமனை வளாகத்தில் கிராம மக்களும் உள்ளூர் பொதுமக்களும் அலைமோதி வருகின்றனர்.
மருத்துவர்களின் விளக்கப்படி, மருத்துவ அறிவியல் உலகில் இது இரட்டைக் குழந்தைகள் முழுமையாக வளர்ச்சியடையாததன் காரணமாக ஏற்படும் ஒரு நிலையாகும். தாயின் கருவுற்ற காலத்தில் இரண்டு இரட்டைக் கருக்கள் உருவாகியிருக்க வேண்டும்; ஆனால் சில மருத்துவச் சிக்கல்களால் இரண்டாவது கரு முழுமையாக வளராமல், அதன் கை கால்கள் மட்டும் முதன்மைக் குழந்தையின் உடலோடு ஒட்டிக்கொண்டு வளர்ந்துவிட்டன.
மேலும் பிறக்கும்போதே 3 கிலோ எடையுடன் இருந்த இந்தக் குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. குழந்தையின் உடல்நிலை தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை மூலம் கூடுதல் உறுப்புகளைப் பாதுகாப்பாக அகற்ற முடியுமா என்பது குறித்து உயர்மட்ட மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இமாச்சலப் பிரதேசத்திலும் இது போன்ற மற்றொரு ஆச்சரிய சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. ஒரு பெண் 24 விரல்களுடன் கூடிய அதிசயக் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அக்குழந்தையின் இரு கைகள் மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் உள்ளன. மருத்துவ மொழியில் இதனை ‘பாலிடாக்டிலி’ என்று அழைப்பதாகவும், இது கருவில் வளர்ச்சியின் போது ஏற்படும் ஒரு இயல்பான நிகழ்வுதான் என்றும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
