கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், விஐபி (VIP) வருகைக்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் வாகன அணிவகுப்பு அந்தச் சாலை வழியாகக் கடந்து செல்லவிருந்ததால், போக்குவரத்து போலீஸார் அங்கு ‘ஜீரோ டிராஃபிக்’ (Zero-Traffic) விதிமுறையை அமல்படுத்தி அனைத்து வாகனங்களையும் முழுமையாக நிறுத்தினர்.
அப்போது, தனது கர்ப்பிணி மனைவியுடன் காரில் வந்துகொண்டிருந்த சிவப்பு நிற டி-சர்ட் அணிந்த இளைஞர் ஒருவர், பெங்களூருவின் கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், விஐபி கலாச்சாரக் கட்டுப்பாடுகளாலும் தனது மனைவி அவதிப்படுவதைக் கண்டு கடும் கோபமடைந்தார். உடனடியாகக் காரை விட்டு இறங்கிய அவர், ஆளுநரின் கான்வாய் வரவிருந்த சாலையின் நடுவே அமர்ந்து தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
Man with pregnant wife in car sits in protest on road after traffic was blocked for #VVIP convoy
Incident took place in India’s silicon valley — 📍#Bengaluru on Sunday pic.twitter.com/LEHnjLmZPd
— Karan Singh / करन सिंह (@Journo_Karan) June 1, 2026
ஏற்கனவே பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் ஒரு பெரும் சாபக்கேடாக உள்ள நிலையில், இத்தகைய விஐபி கலாச்சாரக் கட்டுப்பாடுகள் பொதுமக்களை மேலும் அவதிக்குள்ளாக்குகின்றன என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. நடுரோட்டில் அமர்ந்த இளைஞரை அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் சமாதானப்படுத்த முயன்றதோடு, அவருக்கு மாற்றுப் பாதையை ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்தனர்.
இருப்பினும், அந்த இளைஞர் தனது நிலையில் உறுதியாக இருந்து விஐபி சலுகைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பினார். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகே போலீஸார் அவரைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். அண்மையில் மும்பையிலும் பாஜகவின் போராட்ட டிராஃபிக்கில் சிக்கிய பெண் ஒருவர் போலீஸாரை நடுரோட்டில் வைத்துக் கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பெங்களூருவிலும் இத்தகையதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
