பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள சர்ஹத் பைபாஸ் மேம்பாலம் அருகேயுள்ள புதரில், நீல நிற பிளாஸ்டிக் டிரம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஜான்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி நேஹா என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நேஹா, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது, பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான விராட் என்பவருடன் நேஹாவிற்கு காதல் மலர்ந்துள்ளது. நேஹா தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 25-ஆம் தேதி இரவு, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேஹாவைத் தனது அறைக்கு அழைத்த விராட், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பின் சடலத்தை மறைப்பதற்காக, சந்தைக்குச் சென்று ரூ.1000-க்கு ஒரு புதிய பிளாஸ்டிக் டிரம்மை வாங்கிய விராட், அதற்குள் நேஹாவின் உடலை திணித்து மூடியுள்ளார். பின்னர் நள்ளிரவில் இ-ரிக்ஷா ஒன்றினை வாடகைக்கு எடுத்து, அதற்குள் குப்பை இருப்பதாக ஓட்டுநரிடம் பொய் கூறி, மேம்பாலத்தின் அருகேயுள்ள பாழடைந்த புதரில் டிரம்மை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். மறுநாள் காலை துப்புரவுத் தொழிலாளி கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டனர்.
சிறுமியின் அடையாளம் தெரியாததால் அவரது புகைப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்; அதனைக் கண்டு நேஹாவின் சகோதரர் உடலை அடையாளம் காட்டினார். தொடர்ந்து நேஹாவின் மொபைல் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக விராட்டிடம் பேசியது உறுதியானது. இதையடுத்து, உத்தரப் பிரதேசத்திற்கு தப்பியோட முயன்ற கொலையாளி விராட்டை, பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
