சமூக ஊடகங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு உதாரணமாக, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான ‘ஹனி டிராப்’ கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு, சமூக ஊடகத் தளம் வழியாகப் பெண் ஒருவரிடமிருந்து நட்பு அழைப்பு வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட அந்த இளைஞருடன், அந்தப் பெண் தொடர்ந்து பேசி அலாதி அன்பைக் காட்டி அவரது நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.
நாளுக்கு நாள் இவர்களது நட்பு பலமடைந்த நிலையில், இருவரும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் இனிமையான பேச்சை முழுமையாக நம்பிய அந்த இளைஞர், எந்தவித சந்தேகமும் இன்றி அவரைச் சந்திக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகு அவரது வாழ்க்கை ஒரு திரைப்படம் போல தலைகீழாக மாறியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின்படி, அந்தப் பெண் அவரை யாருமற்ற ஒரு பாழடைந்த தனி இடத்திற்கு வரவழைத்துள்ளார். இளைஞர் அங்கு சென்றவுடன், அந்தப் பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து அவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்த பணம் மற்றும் அவர் அணிந்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து, இளைஞரின் மொபைல் அழைப்புகள் மற்றும் சமூக ஊடக உரையாடல்களின் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து அந்தத் தம்பதியைக் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் பலரை ஆசை வார்த்தை கூறி வரவழைத்துக் கொள்ளையடிப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் கொள்ளையடித்த நகைகளை வாங்கிய மூன்றாவது நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், “சமூக ஊடகங்களின் போலி உலக நண்பர்களைக் குருட்டுத்தனமாக நம்ப வேண்டாம்” என்று போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
