உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், ஒருதலைக் காதல் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வயதுக் குழந்தையைச் சாலையில் எட்டு முறை கொடூரமாகத் தூக்கிப் போட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தாயான ரதி, தனது தோழியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது, அங்கு அவரது கணவரின் அத்தை மகனான வீராஜ் வந்துள்ளார். ரதியை வீராஜ் ஒருதலையாகக் காதலித்து வந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு ரதி மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வீராஜ், குழந்தைக்குச் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி, கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஒன்றரை வயதுக் குழந்தை ஆரவை சாலையில் தூக்கிப் போட்டு 8 முறை கொடூரமாகப் போட்டு கொன்றுள்ளார். பின்னர் குழந்தையின் உடலை வீட்டின் வாசலிலேயே போட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
இக்கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு கொலையாளி வீராஜைக் காலில் குண்டு துளைத்த நிலையில் கைது செய்தனர். இதற்கிடையே, தனது குழந்தையின் மரணத்திற்குத் தனது கணவர் சுனீத் மற்றும் புகுந்த வீட்டினரின் கூட்டுச் சதியே காரணம் என்றும் ரதி குற்றம் சாட்டியுள்ளார்.
தன் கண் முன்னே துடிதுடிக்கக் கொல்லப்பட்ட மகனின் உடலைப்பார்த்துத் துடித்த ரதி, “என் மகனைக் கொன்ற அந்தப் பாவிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். சட்டம் அவனுக்குத் தண்டனை வழங்காவிட்டால், அவனை என்னிடம் ஒப்படையுங்கள்; நான் அவனை என் கைகளாலேயே கடித்துக் குதறிக் கொன்றுவிடுகிறேன் என நெஞ்சை உலுக்கும் வகையில் கதறி அழுது நீதி கேட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
