மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் பகுதியில், கடுமையான பண நெருக்கடி மற்றும் குடும்பச் சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், விவசாயி ஒருவர் கோடாரியால் தனது பிறப்புறுப்பைத் துண்டித்துக் கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான அந்த விவசாயிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக உள்ள நிலையில், மூத்த மகளுக்கு வரும் ஜூன் 25-ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. ஒருபுறம் மனைவியின் தொடர் மருத்துவச் செலவுகள், மறுபுறம் மகளின் திருமணப் பொறுப்பு என அனைத்தும் சேர்ந்து அவரைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால், தான் பல பாவங்களைச் செய்துவிட்டதாகக் கருதிய அவர், குடும்பப் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு ஒரு ஆன்மீக ‘பாபா’வாக மாறத் துணிந்துள்ளார்.

தவறான சிந்தனையால் தனது பிறப்புறுப்பே அனைத்துப் பாவங்களுக்கும் காரணம் என முடிவு செய்த அவர், நேற்று காலை தனது வயலில் உள்ள கிணற்றின் அருகே சென்று கோடாரியால் அதனைத் துண்டித்துக் கிணற்றுக்குள் வீசியுள்ளார். இதனால் கடுமையான ரத்தப்போக்கு ஏற்படவே, அவரே தனது குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

பதறியடித்துக்கொண்டு வயலுக்கு ஓடிவந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடுமையான ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.