கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனை பிணவறையில், உயிரிழந்த பெண்களின் உடல்களுக்கு அவமரியாதை செய்யும் வகையில் அரங்கேறியுள்ள வக்கிரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஊழியராகப் பணியாற்றி வரும் முனிர் அகமது என்பவர், பிரேதப் பரிசோதனைக்காக வரும் இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களின் ஆடைகளை அகற்றி, தனது செல்போனில் ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளார்.
சக ஊழியர் ஒருவர் இதனைத் தடுத்தும் கேளாமல் முனிர் அகமது தொடர்ந்து தனது வக்கிரச் செயலில் ஈடுபட்டு வந்த நிலையில், இதுகுறித்து பிணவறை மருத்துவரிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் நடத்திய சோதனையில் அந்த ஊழியரின் செல்போனில் ஆபாசப் படங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனை டீன் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்த முனிர் அகமது அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாநில மகளிர் ஆணையத்தினர், “பெண்கள் உயிருடன் இருக்கும்போதுதான் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றால், இறந்த பிறகும் கூட அவர்களது உடலை நிம்மதியாக மறைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது” எனத் தங்களது கடும் கண்டனத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த வக்கிரக் குணம் கொண்ட நபர் மீது மிக விரைவாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் போலீஸார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
