நாட்டில் வசிக்கும் வயது வந்தோரிடையே உடல் பருமன் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள்கவலைகொள்ளும் வகையில் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள 6-ஆவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-6) புதிய புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. இத்தரவுகளின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 30.7 சதவீதத்தினர் உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் உள்ளனர். குறிப்பாக, கிராமப்புற பெண்களை விட (25.5%) நகர்ப்புற பெண்களிடையே (42.8%) இந்தத் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
இதேபோல், ஆண்களிடையே உடல் பருமன் 27.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதுச்சேரி (46.3%), சண்டிகர், தில்லி மற்றும் தமிழ்நாடு (40.5%) ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பெண்களின் உடல் பருமனில் முதலிடத்தில் உள்ளன. ரத்த சர்க்கரை அளவைப் பொறுத்தவரை, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இந்த பாதிப்பு 17.8 சதவீதமாகவும், ஆண்களில் 20.9 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மேலும், பெண்களை விட ஆண்களையே உயர் ரத்த அழுத்தம் (Hyper-tension) அதிகளவில் (22.1%) பாதிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
மற்றொருபுறம், நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாட்டில் பெண்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளனர். கடந்த கணக்கெடுப்பில் 52.9 சதவீதமாக இருந்த பெண்களின் இன்டர்நெட் பயன்பாடு, தற்போது 73.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. சொந்தமாக வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை 89 சதவீதமாகவும், மொபைல் போன் பயன்படுத்தும் பெண்கள் 63.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளனர். கல்வித்துறையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிக்குச் சென்ற பெண்களின் விகிதம் 39.4 சதவீதத்திலிருந்து 50.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த 2014-இல் 45-ஆக இருந்தது, தற்போது 28-ஆகக் குறைந்துள்ளது. மருத்துவமனை பிரசவங்கள் 88.7 சதவீதமாக அதிகரித்துள்ள அதே வேளையில், சிசேரியன் (அறுவை சிகிச்சை) பிரசவங்கள் 17.4 சதவீதமாக உயர்ந்துள்ளன. பாதுகாப்பான குடிநீர் மற்றும் தடுப்பூசி திட்டங்களால், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கடுமையான வயிற்றுப்போக்கு பாதிப்பு 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் இந்த விரிவான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
