சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகளும், மரியாதைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், மின்னணு சாதன விற்பனை நிலையம் ஒன்றில் பெண்ணொருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அஞ்சலி திவாரி என்ற பெண் தனது கணவருடன் மகளிர் தினத்தன்று ஏர் கண்டிஷனர் வாங்குவதற்காக ஒரு வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு விற்பனையாளரிடம் ஏசி-யின் தொழில்நுட்பம் குறித்து இருவரும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் உரையாடலில் முழுமையாகப் பங்கேற்ற போதிலும், விற்பனையாளர் அந்தப் பெண்ணைப் பார்க்காமல் அவரது கணவரை மட்டுமே பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் தனது குழந்தையைக் கவனிப்பதில் மும்முரமானார். அப்போது அவரது கணவர், மனைவியை மீண்டும் உரையாடலில் இணையுமாறு அழைத்தார். அதற்கு அந்த விற்பனையாளர், “பரவாயில்லை விடுங்கள், இது அவருக்குப் புரியாது” என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.
விற்பனையாளரின் இந்தப் ஆணாதிக்கப் போக்கைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தத் தம்பதியினர், அந்தப் போக்கைக் கண்டித்ததோடு அங்கிருந்து எந்தப் பொருளையும் வாங்காமல் வெளியேறினர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோவை அஞ்சலி சமூக வலைதளத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவை சுமார் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் கல்வியிலும் தொழில்நுட்பத்திலும் பெண்கள் சிறந்து விளங்கும் இக்காலத்திலும், “பெண்களுக்கு மின்னணு சாதனங்கள் பற்றித் தெரியாது” என்ற பொதுப்புத்தி சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
