இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏசி மற்றும் கூலர்களின் பயன்பாட்டைக் குறைத்து, வீட்டை இயற்கையாகக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் எளிய நடுத்தர தொழில்நுட்பம் ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ் கே சென் என்பவர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், ரித்தேஷ் என்ற நபர் 44 டிகிரி செல்சியஸ் வெயிலிலும் தனது வீட்டு மொட்டை மாடியில் வெறும் காலில் நின்றுகொண்டு அச்சுற்றுப்புறத்தின் வெப்பநிலையை வியக்கத்தக்க வகையில் மாற்றிக் காட்டியுள்ளார்.

இது எந்தவொரு அதிசயமும் அல்ல, தூய அறிவியல் என்று கூறும் அவர், எளிய பொருட்களைக் கொண்டு மாடியின் மேற்பரப்பில் பூசப்படும் ஒரு கலவை தான் இதற்குக் காரணம் என்றும், இது மாடியின் வெப்பத்தை கிட்டத்தட்ட 15 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கிறது என்றும் விளக்கியுள்ளார்.

இந்தக் கலவையைத் தயாரிக்க 20 கிலோ கட்டைச் சுண்ணாம்பு , ஃபெவிகால் டிடிஎல் பைண்டர் மற்றும் யுஆர்பி (URP) எனப்படும் நீர்ப்புகா கலவை ஆகியவையே போதுமானது. சுண்ணாம்பை இரவிலேயே 50 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, அது குளிர்ந்ததும் மற்ற இரு திரவங்களையும் கலந்து மொட்டை மாடியில் இரண்டு அடுக்குகளாகப் பூச வேண்டும். 1,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு வீட்டிற்கு இம்முறையைப் பயன்படுத்த வெறும் 800 முதல் 850 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று ரித்தேஷ் கணக்கிட்டுக் காட்டியுள்ளார். இந்த முறையானது சூரியக் கதிர்களை உறிஞ்சாமல் அப்படியே எதிரொளிப்பதால்  வீட்டின் உட்புற வெப்பநிலை குறைந்து சாதாரண மின்விசிறியே குளிர்ந்த காற்றைத் தரும் என்று நெட்டிசன்கள் பலரும் இந்த எளிய கண்டுபிடிப்பை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.