உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் அருகே பெத்வா நதியின் குறுக்கே கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி, வியாழக்கிழமை நள்ளிரவில் வீசிய பலத்த சூறாவளி மற்றும் பலத்த மழையின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 கூலித் தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஹமீர்பூரின் மோரா காண்டர் மற்றும் குராலா ஆகிய பகுதிகளை இணைப்பதற்காக 900 மீட்டர் நீளமுள்ள இந்த புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது.

நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் பாலத்தின் ராட்சத கான்கிரீட் சிலாப் திடீரென சரிந்து விழுந்ததில், அதன் கீழ் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்டிஆர்எஃப் (SDRF) மீட்புக் குழுவினர், உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

 

இவ்விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, இந்த விபத்து அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஐ.பி. சிங், “பாஜக அரசின் ஊழல் மற்றும் கமிஷன் கலாசாரமே 6 ஏழைத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ளது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இப்பாலக் கட்டுமான ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.