பிகார் மாநிலம் ஹாஜிப்பூரைச் சேர்ந்த அமன் குமார் என்பவர், தனது மனைவி குஞ்சன் குமாரிக்கு அரசு வேலை கிடைத்தவுடன் தன்னையும், தங்களது 10 வயது மகனையும் கைவிட்டுச் சென்றுவிட்டதாகக் காவல் துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமான போது குஞ்சன் குமாரி இடைநிலை (Intermediate) மட்டுமே முடித்திருந்தார் என்றும், ஆசிரியராக வேண்டும் என்ற அவரது லட்சியத்திற்காகத் தான் கூலி வேலை செய்து அவரைப் படிக்க வைத்ததாகவும் அமன் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், மனைவியின் உயர் கல்விக்காகத் தனது பூர்வீக நிலத்தையும் விற்றுப் பணம் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது பி.பி.எஸ்.சி (BPSC) தேர்வு மூலம் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தவுடன், மனைவி தடம் மாறிவிட்டதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

பயிற்சிக் காலத்தின் போது பிரேம் பிரகாஷ் என்ற மற்றொரு ஆசிரியருடன் குஞ்சன் குமாரிக்கு ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா செல்வதாகக் கூறி 10 வயது மகனை கணவரிடம் அனுப்பி வைத்த ஆசிரியை, தனது காதலனுடன் தனியாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த மே 23 அன்று மனைவியின் வாடகை வீட்டிற்குச் சென்ற அமன் குமார், அங்கு மனைவியும் அவரது காதலனும் அநாகரிகமான முறையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவசரக் காவல் எண்ணிற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவர்களது 10 வயது மகன் ஆரூஷ் கூறுகையில், தனது தாயார் வேறொரு நபரை ‘மாமா’ என்று அழைக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், அவரோடு வாழ தனக்கு விருப்பமில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.