இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் (Article 21) வழங்கப்படும் வாழும் உரிமைக்கான சட்டத்தில், விபத்து மற்றும் அவசர காலங்களில் குடிமக்களுக்குக் கிடைக்கும் ‘அதிவிரைவு அவசர சிகிச்சை’ (Trauma Care) என்பதும் ஒரு முக்கிய அங்கமாகும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘சேவ் லைஃப் ஃபவுண்டேஷன்’ தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ்.சந்துர்கர் அடங்கிய அமர்வு, விபத்துகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒருவரின் உயிர் பிழைக்கும் வாய்ப்பை தீர்மானிப்பதால், அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அடுத்த 3 மாதங்களுக்குள் அவசர உதவிக்கான ‘112’ என்ற ஒற்றை ஹெல்ப்லைன் எண்ணை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது.

​மேலும், விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முன்வரும் பொதுமக்களுக்கு (Good Samaritans) காவல் நிலைய விசாரணை அல்லது சட்ட ரீதியான பயம் ஏற்படாத வகையில் முறையான புகார் தீர்ப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனுடன், அனைத்து அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களிலும் ஜிபிஎஸ் (GPS) மற்றும் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்களைப் பொருத்தி 112 ஹெல்ப்லைனுடன் இணைக்க வேண்டும் என்றும், விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச மற்றும் ரொக்கமில்லா சிகிச்சை வழங்கும் ‘PM RAHAT 2025’ திட்டத்தை 3 மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என்றும், இதுகுறித்த விழிப்புணர்வை பல மொழிகளில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.