செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதால், நிலைமை கைமீறிச் செல்லும்போது அதனை உடனடியாக முடக்குவதற்கு ‘கில் சுவிட்ச்’ போன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பு அவசியம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், வங்கிச் சேவைகள் முதல் இணையப் பாதுகாப்பு வரை ஏஐ தொழில்நுட்பம் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தினாலும், அது தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினால் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

இது குறிப்பாக, வங்கி அமைப்புகளின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் அளவுக்கு இதற்குத் திறன் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் கடுமையான கண்காணிப்பு இதற்குத் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ‘கிளாட் மிதோஸ்’ போன்ற அதிநவீன ஏஐ மாடல்கள் இணையப் பாதுகாப்பிற்குச் சவாலாக அமையலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏஐ தொழில்நுட்பம் மனிதக் கட்டுப்பாட்டை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய, அவசர காலங்களில் அதைச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதே அவரது கருத்தின் மையமாகும். இத்தகைய ‘கில் சுவிட்ச்’ முறையை யார் கட்டுப்படுத்துவது மற்றும் அது எவ்வாறு செயல்படும் என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்புக் குறித்த கவலைகளை இது பிரதிபலிக்கிறது.